- Back to Home »
- பாதுகாப்பு வளையம்
Posted by : Sibhi Kumar SenthilKumar
Tuesday, December 10
நம் நாட்டின் தலைநகரத்தில் நடந்த சம்பவம் இது... வேகமாக வந்த கார் ஒரு மிதிவண்டியை இடிக்காமல் இருக்க வலப்புறம் திரும்ப முயற்சி செய்யும்போது அருகே உள்ள மின்கம்பத்தின் மேல் பலமாக மோதியது. இடித்த வேகத்திலே அதை ஓட்டிவந்த காரின் உரிமையாளர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். "இது என்ன பெரிய விஷயம் தம்பி... இந்தியாவிலே சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களிலே தமிழ்நாடு தான் இரண்டாவது இடம்... என்னவோ டெல்லி'ல நடந்தது பெரிய விஷயமா பேசுற.." ன்னு நினைப்பீங்க..
இந்தியாவில சராசரியா ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சத்து நாற்பத்திரண்டாயிரம் நபர்கள் சாலை விபத்துகளால் கொல்லப்படுகிறார்கள். சுமார் ஐந்து லட்சம் பேர் காயங்களுடன் உயிர் பிழைக்கிறார்கள். அந்த ஐந்து லட்சத்தில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்க்கை முழுவதும் அசைவில்லாமல் போய்விடுகிறார்கள். அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து. நான்கு நிமிடத்திற்கு ஒருவர் இறக்கிறார். இதை நான் சொல்லலங்க.. நம்ம அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லுது.
சாலை விபத்தின் முக்கியமான காரணமே அலட்சியம் தான். இங்கே வாகனத்தை ஓட்டுபவர்களின் திறமையை பரிசீலிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் வாகனத்தை ஓட்ட விருப்பமுள்ளவர்கள் மட்டுமே ஓட்டுகிறார்கள். விருப்பமில்லாதவர்கள் அமைதியாக ஒதுங்கிவிடுகிறார்கள். சாலை விபத்துகள் ஒவ்வொன்றின் பின்பும் அலட்சியங்கள் மட்டுமே உள்ளது. அவை சிறியதோ பெரியதோ, விளைவு மிகவும் பெரியதாகவே உள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலிருந்தே அனைத்தும் தொடங்குகிறது.
என்னதான் நாம் ஒழுங்காக விதிமுறைகளை பின்பற்றி வந்தாலும் எதிரே வருபவர் செய்யும் சிறு தவறால் நாமும் அந்த விளைவை அனுபவிப்போம். எனவே நாம் எப்பொழுதும் முழு கவனத்துடனும் வாகனத்தை ஓட்டும்போது தான் இந்த அசம்பாவிதங்களிலிருந்து தப்ப முடியும்.
"என் காரில் சுற்றிலும் ஆறு Airbags, ABS என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை" .. ஹலோ பாஸ்.. இப்போது முதல் பத்திக்கு வருகிறேன். விபத்துக்குள்ளானது நானோவோ மாருதி ஆல்டோவோ கிடையாது. மூன்று கோடி பெறுமானமுள்ள ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கார். அதிலில்லாத பாதுகாப்பு அம்சமே இல்லை. அந்த உரிமையாளரை காப்பாற்ற வேண்டிய காற்றுப்பைக்களே அவர் வேகமாக பரலோகம் செல்வதற்கு உதவி செய்தது!!! என்ன ஆயிற்று???
லோக்கலில் தானே வண்டியை எடுக்கிறோம் என்று அந்த உரிமையாளர் தனது சீட் பெல்ட்டை போடவில்லை. எனவே விபத்து நடந்த பிறகு விரிந்த காற்றுப்பை அவரின் முகத்தை முழுவதுமாக மூடி மூச்சு விடமுடியாமல் இறந்துவிட்டார். ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால், சீட் அவரை வேகமாக தன பக்கம் இழுத்துக்கொள்ளும். எனவே இது நாம் ஸ்டியரிங்கில் மோதவிடாமல் தடுக்கிறது. நமது நெஞ்சு பகுதி வேகமாக ஸ்ட்யரீங் வீலை இடிக்கும் போது நெஞ்செலும்பு நொறுங்கிவிடும் . நெஞ்செலும்பு நொறுங்கினால் காப்பாற்றுவது மிகவும் கடினம்.
தமிழ்நாடு அரசு தற்போது சென்னையில் கார் ஓட்டும் அனைவரும் கட்டாயமாக சீட் பெல்ட் அணியவேண்டும் என்று சட்டம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. முதல் நாளிலே பலர் பின்பற்றுவதை நேரிலே பார்த்தேன். இதை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
இதை உங்களுக்கு சொல்வதோடு நின்றுவிடாமல் இன்றுமுதல் நானும் சீட் பெல்ட் அணிந்தே காரை ஓட்டுவேன் என்று சபதம் எடுத்துக்கொள்கிறேன்.
பி.கு. சீட் பெல்டிற்கு தமிழில் நிகரான வார்த்தையை தேடிகொண்டிருந்தேன். நெடுஞ்சாலையில் ஓரிடத்தில் சீட் பெல்ட்டை 'பாதுகாப்பு வளையம்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்க வேண்டும்.
கொசுறு. தமிழ்நாடு இந்தியாவிற்கு தன் பங்காக வருடத்திற்கு சுமார் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை சாலை விபத்துகளில் இழக்கிறது. (2011 ஆம் ஆண்டின் படி)
தமிழ்நாடு அரசு தற்போது சென்னையில் கார் ஓட்டும் அனைவரும் கட்டாயமாக சீட் பெல்ட் அணியவேண்டும் என்று கூறிய சூழ்நிலையில் இது அவசியமான பதிவுயாகும் நன்றி நண்பரே.
ReplyDelete