Archive for 2013

பாதுகாப்பு வளையம்

நம் நாட்டின் தலைநகரத்தில் நடந்த சம்பவம் இது... வேகமாக வந்த கார் ஒரு மிதிவண்டியை இடிக்காமல் இருக்க வலப்புறம் திரும்ப முயற்சி செய்யும்போது அருகே உள்ள மின்கம்பத்தின் மேல் பலமாக மோதியது. இடித்த வேகத்திலே அதை ஓட்டிவந்த காரின் உரிமையாளர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். "இது என்ன பெரிய விஷயம் தம்பி... இந்தியாவிலே சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களிலே தமிழ்நாடு தான் இரண்டாவது இடம்... என்னவோ டெல்லி'ல நடந்தது பெரிய விஷயமா பேசுற.." ன்னு நினைப்பீங்க..

இந்தியாவில சராசரியா ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சத்து நாற்பத்திரண்டாயிரம் நபர்கள் சாலை விபத்துகளால் கொல்லப்படுகிறார்கள். சுமார் ஐந்து லட்சம் பேர் காயங்களுடன் உயிர் பிழைக்கிறார்கள். அந்த ஐந்து லட்சத்தில் பெரும்பான்மையானோர் தங்கள் வாழ்க்கை முழுவதும் அசைவில்லாமல் போய்விடுகிறார்கள். அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து. நான்கு நிமிடத்திற்கு ஒருவர் இறக்கிறார். இதை நான் சொல்லலங்க.. நம்ம அரசாங்கம் 2011 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லுது. 

சாலை விபத்தின் முக்கியமான காரணமே அலட்சியம் தான். இங்கே வாகனத்தை ஓட்டுபவர்களின் திறமையை பரிசீலிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் வாகனத்தை ஓட்ட விருப்பமுள்ளவர்கள் மட்டுமே ஓட்டுகிறார்கள். விருப்பமில்லாதவர்கள் அமைதியாக ஒதுங்கிவிடுகிறார்கள். சாலை விபத்துகள் ஒவ்வொன்றின் பின்பும் அலட்சியங்கள் மட்டுமே உள்ளது. அவை சிறியதோ பெரியதோ, விளைவு மிகவும் பெரியதாகவே உள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலிருந்தே அனைத்தும் தொடங்குகிறது.

என்னதான் நாம் ஒழுங்காக விதிமுறைகளை பின்பற்றி வந்தாலும் எதிரே வருபவர் செய்யும் சிறு தவறால் நாமும் அந்த விளைவை அனுபவிப்போம். எனவே நாம் எப்பொழுதும் முழு கவனத்துடனும் வாகனத்தை ஓட்டும்போது தான் இந்த அசம்பாவிதங்களிலிருந்து தப்ப முடியும்.

"என் காரில் சுற்றிலும் ஆறு Airbags, ABS என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை" .. ஹலோ பாஸ்.. இப்போது முதல் பத்திக்கு வருகிறேன். விபத்துக்குள்ளானது நானோவோ மாருதி ஆல்டோவோ கிடையாது. மூன்று கோடி பெறுமானமுள்ள ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கார். அதிலில்லாத பாதுகாப்பு அம்சமே இல்லை. அந்த உரிமையாளரை காப்பாற்ற வேண்டிய காற்றுப்பைக்களே அவர் வேகமாக பரலோகம் செல்வதற்கு உதவி செய்தது!!! என்ன ஆயிற்று???லோக்கலில் தானே வண்டியை எடுக்கிறோம் என்று அந்த உரிமையாளர் தனது சீட் பெல்ட்டை போடவில்லை. எனவே விபத்து நடந்த பிறகு விரிந்த காற்றுப்பை அவரின் முகத்தை முழுவதுமாக மூடி மூச்சு விடமுடியாமல் இறந்துவிட்டார். ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால், சீட் அவரை வேகமாக தன பக்கம் இழுத்துக்கொள்ளும். எனவே இது நாம் ஸ்டியரிங்கில் மோதவிடாமல் தடுக்கிறது. நமது நெஞ்சு பகுதி வேகமாக ஸ்ட்யரீங் வீலை இடிக்கும் போது நெஞ்செலும்பு நொறுங்கிவிடும் . நெஞ்செலும்பு நொறுங்கினால் காப்பாற்றுவது மிகவும் கடினம். 

தமிழ்நாடு அரசு தற்போது சென்னையில் கார் ஓட்டும் அனைவரும் கட்டாயமாக சீட் பெல்ட் அணியவேண்டும் என்று சட்டம் நிறைவேற்றியுள்ளது வரவேற்கத்தக்கது. முதல் நாளிலே பலர் பின்பற்றுவதை நேரிலே பார்த்தேன். இதை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.இதை உங்களுக்கு சொல்வதோடு நின்றுவிடாமல் இன்றுமுதல் நானும் சீட் பெல்ட் அணிந்தே காரை ஓட்டுவேன் என்று சபதம் எடுத்துக்கொள்கிறேன். 

பி.கு.  சீட் பெல்டிற்கு தமிழில் நிகரான வார்த்தையை தேடிகொண்டிருந்தேன். நெடுஞ்சாலையில் ஓரிடத்தில் சீட் பெல்ட்டை 'பாதுகாப்பு வளையம்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்க வேண்டும். 

கொசுறு. தமிழ்நாடு இந்தியாவிற்கு தன் பங்காக வருடத்திற்கு சுமார் பதினைந்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை சாலை விபத்துகளில் இழக்கிறது. (2011 ஆம் ஆண்டின் படி)
Tuesday, December 10
Posted by Sibhi Kumar SenthilKumar

புரியாத புதிர்கள்..

இந்த காலத்தில் கார் இல்லாத வீடே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. முன்பெல்லாம் பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள் வசமிருந்த கார்கள் தற்போது சாமானியர்களுக்கு கூட எட்டும் வண்ணமே உள்ளது.

கார் வாங்க முடிவெடுத்துவிட்டால் போதும்.. குடும்பத்தலைவருக்கு உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது நமக்கு எப்பொழுதோ லிஃப்ட் கொடுத்தவர்கள் என அனைத்து மட்டத்திலிருந்தும் ஆலோசனைகள் குவிந்துவிடும். அதுவரை நம்மிடம் பேசாத நண்பன் கூட அறிவுரைகளை அள்ளி தெளிப்பான். அந்த ஆலோசனைகளை கேட்க கேட்க நமக்கு ஒருப்பக்கம் உற்சாகமும் ஒரு பக்கமும் பயமும் வந்து சேர்ந்துவிடும்.

சமீபத்தில், தங்கள் கனவு வாகனத்தை பல லட்சங்கள் கொடுத்து வாங்கி விட்ட  பிறகு அது தரும் தொல்லைகள் தாங்காமல் அதனை பாதி விலைக்கு விற்கும் பல மனிதர்களை சந்தித்தேன். அவர்கள் செய்த முக்கியமான தவறு மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை மட்டும் கருத்தில் கொண்டு கார் வாங்கியது தான்.

நெருங்கிய நண்பனுக்கு வாய்த்த தொல்லை தராத காரை நாமும் வாங்கினால் பின்பு பிரச்னை வராது என்று நினைத்தால் அது மிகவும் தவறு. ஏனென்றால் அவருடைய தேவைகள் வேறு. உங்களின் தேவைகள் வேறு. எனவே கார் வாங்கவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆராயுங்கள். இணையதள தேடலோடு நின்று விடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட ஷோரூம்களை பார்வையிட மறந்துவிடாதீர்கள்.

ஷோரூமுக்கு வந்தாயிற்று. அங்கே இருக்கும் விற்பனை அதிகாரி அங்கே நிற்கும் காரை உங்களது கனவு கார் என்று விவரிப்பார். எல்லா ஷோரூம்களிலும் அவர்களது காரை நன்றாக பாலிஷ் போட்டு அலங்கார விளக்குகள் வைத்து மிகவும் அழகாக காட்டுவார்கள்.  அதை பார்த்து உண்மையாக மயங்கினாலும் அவர்களது முன் காட்டிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக 'எனக்கு எதுவும் தெரியாது' என்பது போல நிற்கவேண்டாம்.

காரை உங்களிடம் காட்டியவுடன் டிரைவர் சீட்டில் அமர்ந்து உங்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று பார்த்துகொள்ளுங்கள். அந்த காரை பற்றி நீங்கள் முன்பே இணையதளத்தில் பார்த்த குறைகளை விற்பனை அதிகாரியிடம் கேட்க தவறாதீர்கள். இந்த சமயத்தில் தான் பல நபர்கள் ஏமாற்ற  படுகிறார்கள். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு புரியாத சொற்களை கொண்டு விளக்குவார். நன்றாக நினைவில் கொள்ளுங்கள், அந்த சொற்கள்தான் உங்களின் மகிழ்ச்சியை நிர்ணயிக்க போகிறது.

அவற்றில் சிலவற்றை உங்களுக்கு சொல்கிறேன்...

AIRBAG::


இதனை பற்றி நான் முன்பே ஒரு பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன். பார்க்க-- http://sibhikumar.blogspot.in/2011/02/blog-post_21.html

என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். வாழ்க்கை நிலையற்றது. பாதுகாப்பாக இருக்கவேண்டியது நம் கடமை. எனவே நீங்கள் வாங்கும் காரில் கட்டாயமாக காற்றுப்பைகள் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.

ABS (Anti Locking Braking System)::


அதி வேகத்தில் கார் செல்லும்போது பிரேக்கை பிடித்தால் டயர் லாக் ஆகிவிடும். இதுவே Toppling (அதாவது அந்தர் பல்டி) ஆவதற்கு மூல காரணம். ABS என்னும் இந்த தொழில்நுட்பம் இதனை கட்டுபடுத்துகிறது. அதாவது டயர் லாக் ஆகாமல் இந்த தொழில்நுட்பம் பார்த்துக்கொள்கிறது.

EBD (Electronic Brake Force Distribution)::


இதுவும் ABS னுடைய ஒரு அங்கம். நாம் கொடுக்கும் பிரேக்கை  வண்டியின் எடையை பொறுத்து சமமாக முன் வீலுக்கும் பின் வீலுக்கும் பங்களிப்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் வேலை.

2-DIN Music system::


இதை பற்றி தெரிந்தால் நீங்களே வாய்விட்டு சிரிப்பீர்கள். ஆடியோ சிஸ்டத்தின் அளவை குறிப்பிடும் சொற்களே 1-DIN , 2-DIN ஆகும். இதனை மிகவும் பெரிய வசதியாக விற்பனை அதிகாரி விவரிப்பார்.

Keyless Entry::


சோம்பேறித்தனத்தின் எல்லை தான் இது. சாவியை பாக்கெட்டில் வைத்திருந்தால் போதும். நாம் காரை நெருங்கும்போது தானாகவே பூட்டு திறந்து கொள்ளும். உள்ளே சென்ற பிறகு கூட சாவியை போட தேவையில்லை. வண்டிக்குள் சாவி இருந்தால் போதும். Start/Stop பட்டனை தட்டினால் தானாகவே ஸ்டார்ட் ஆகிவிடும்.

Immobilizer::


காரின் உண்மையான சாவியில் (டூப்ளிகேட்டையும் சேர்த்து) ரகசிய எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எண்கள் காரின் ரகசிய எண்களோடு பொருந்தினால் மட்டுமே ECU (Engine Control Unit) பணிசெய்யும். அச்சு அசலாக டூப்ளிகேட் சாவி செய்தால் கூட கதவை மட்டுமே திறக்க இயலும். இது ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு அம்சம். ஜெர்மனியில் 1998 ஆம் வருடமே இது அறிமுகபடுதினாலும் இந்தியாவிற்கு வந்தது சமீபத்திலே.

Cruise Control::


ஹைவேயில் செல்லும்போது ஆக்சிலேட்டரை மிதித்து கொண்டேயிருப்பது வெறுப்பாக இருக்கும். க்ருஸ் கன்ட்ரோல் வசதி இருந்தால் நாம் சொல்லும் வேகத்தில் ஆக்சிலேட்டரை லாக் செய்ய முடியும். இதனை ஆஃப் செய்ய கிளட்ச் 'ஐ பிடித்தால் போதும்.

இன்னும் நிறைய இருக்கிறதென்றாலும் இவையே முக்கியமானது. எனவே 'சூதானமா இருங்க மக்களே..!!!'

நிலையின்மை

நீண்ட காலத்திற்கு பிறகு வலைப்பூ உலகத்திற்கு வந்துள்ளேன். பதினோராம் வகுப்பிற்கு படிக்க ஆந்திரா சென்ற பிறகு வலைப்பூ தொடர்பு விட்டுப்போனது. பின்பு விடுமுறையில் வந்த பிறகு எனது அன்னையின் அறிவுறுத்தலின்படி 'நெல்லூர் டைரிஸ்' என்னும் தொடர் மூலம் மீண்டும் என் வலைப்பூவை உயிர்ப்பிக்கலாம் என்றெண்ணினேன். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பு சுமை அதற்கான அவகாசத்தை அளிக்க மறுத்துவிட்டது.

ஐ.ஐ.டி. கனவோடு ஆந்திராவிற்கு படிக்க சென்ற என்னை நுழைவு தேர்வு முடிவு வருத்தபடவைத்தது. ஆனாலும் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு சற்று ஆறுதலாக இருந்தது. 

பிறகு மேற்படிப்பை தமிழ்நாடு அல்லாது வேறு மாநிலத்தில் படிக்கலாம் என தோன்றியது. ஏனென்றால் இரண்டு வருடங்கள் ஆந்திர மாநிலத்தில் கழித்த கர்வம் என்னுள் இருந்தது. இதில் என்ன கர்வம் என்று கேட்பவர்களுக்கு... நான் ஆந்திர தேசத்திற்கு சென்ற போது எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாது. சரி ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணம் அங்கே சென்றவுடன் மண்ணோடு மண்ணானது. நெல்லூர் ஒரு பெரிய நகரம் என்றார்கள். ஆமாம். எங்கு பார்த்தாலும் உயர்ந்த மாளிகைகள். ஆனால் என்னுடைய விதி அவ்வுளவு எளிதாக இல்லை. என்னுடைய கல்லூரி (குறிப்பு: ஆந்திர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரி என்றே அழைப்பார்கள்) நெல்லூர் நகரத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும் என்றார்கள். இடம் பெயர் 'நரசிம்மகொண்டா' என்றனர். ஆனால் சேர்ந்த பின் நேரில் சென்று பார்த்த பிறகே தெரிந்தது. நகரத்திலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது 'நரசிம்மகொண்டா'.


நெல்லூர் நகரத்திற்கும் நரசிம்மகொண்டாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஒரு பெரிய அரண்மனையை கல்லூரியாக மாற்றியிருந்தார்கள். சுற்றிலும் பெரிய மதில் சுவரும் அதன் பக்கத்தில் அகழியும் பார்ப்பதற்கு மிரட்டலாக இருக்கும். வெளியே எட்டி பார்த்தால் ஹைதராபாத்திற்கு செல்லும் நீண்ண்ண்ண்ட நெடுஞ்சாலையும் பஞ்சாப் லாரிகளும் மட்டுமே தெரியும். கார் பைத்தியமான எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

மாணவர்கள் முதல் கல்லூரி முதல்வர் வரை அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்ப மாட்டார்கள். நாம் ஆங்கிலத்தில் பேசினால் ஏதோ வேற்றுகிரக மனிதர்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள். என் அறையில் என்னை தவிர அனைவரும் தெலுங்கர்கள். மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்கள் என்னை ஆறு மாதத்திலே தெலுங்கை சரளமாக பேசவைத்தது. எனக்கு ஏற்பட்ட அணைத்து கஷ்டங்களும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தது. 

எனவே மேற்படிப்பை வேறு மாநிலத்தில் (கண்டிப்பாக ஆந்திரா இல்லை!!!) படிக்கவேண்டும் என்றே முடிவு செய்திருந்தேன். முடிவில் பெங்களூரு எனக்கு சரியாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு வந்தேன். அதற்காக அந்த மாநில நுழைவு தேர்வு எழுதினேன். அந்த தேர்வில் வந்த மதிப்பெண் மூலம் பெங்களூரின் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் நான் இப்போது படித்துகொண்டிருப்பது வி.ஐ.டி பல்கலைகழகத்தில். இதையெல்லாம் பார்க்கும் போது, வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்று எனக்கு தோன்றியது. சிலர் இதனை விதி என்பார்கள். விதியை பற்றி எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் "மரணம் ஒன்றே மனிதத்தின் நிச்சயமான விஷயம். ஒரு மனிதனை சுற்றி அவன் சந்திக்கும் துர்மரணங்கள், ஏமாற்றங்கள், அசம்பாவிதங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் அவனுக்கு அவனது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் அவனுடைய மரணத்தின் நிச்சயத்துவத்தையும் சுட்டிக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து தனது வாழ்க்கைக்கு ஒரு பொருளை உருவாக்க நினைக்கும் மானுட மனத்தின் உருவாக்கமே விதி என்கிற கோட்பாடு" என்கிறார்.
Saturday, October 12
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

Get Notified !!! Give us your Email Address

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -