Archive for October 2013

நிலையின்மை

நீண்ட காலத்திற்கு பிறகு வலைப்பூ உலகத்திற்கு வந்துள்ளேன். பதினோராம் வகுப்பிற்கு படிக்க ஆந்திரா சென்ற பிறகு வலைப்பூ தொடர்பு விட்டுப்போனது. பின்பு விடுமுறையில் வந்த பிறகு எனது அன்னையின் அறிவுறுத்தலின்படி 'நெல்லூர் டைரிஸ்' என்னும் தொடர் மூலம் மீண்டும் என் வலைப்பூவை உயிர்ப்பிக்கலாம் என்றெண்ணினேன். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பு சுமை அதற்கான அவகாசத்தை அளிக்க மறுத்துவிட்டது.

ஐ.ஐ.டி. கனவோடு ஆந்திராவிற்கு படிக்க சென்ற என்னை நுழைவு தேர்வு முடிவு வருத்தபடவைத்தது. ஆனாலும் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவு சற்று ஆறுதலாக இருந்தது. 

பிறகு மேற்படிப்பை தமிழ்நாடு அல்லாது வேறு மாநிலத்தில் படிக்கலாம் என தோன்றியது. ஏனென்றால் இரண்டு வருடங்கள் ஆந்திர மாநிலத்தில் கழித்த கர்வம் என்னுள் இருந்தது. இதில் என்ன கர்வம் என்று கேட்பவர்களுக்கு... நான் ஆந்திர தேசத்திற்கு சென்ற போது எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தை கூட தெரியாது. சரி ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணம் அங்கே சென்றவுடன் மண்ணோடு மண்ணானது. நெல்லூர் ஒரு பெரிய நகரம் என்றார்கள். ஆமாம். எங்கு பார்த்தாலும் உயர்ந்த மாளிகைகள். ஆனால் என்னுடைய விதி அவ்வுளவு எளிதாக இல்லை. என்னுடைய கல்லூரி (குறிப்பு: ஆந்திர பிரதேசத்தில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரி என்றே அழைப்பார்கள்) நெல்லூர் நகரத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும் என்றார்கள். இடம் பெயர் 'நரசிம்மகொண்டா' என்றனர். ஆனால் சேர்ந்த பின் நேரில் சென்று பார்த்த பிறகே தெரிந்தது. நகரத்திலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது 'நரசிம்மகொண்டா'.


நெல்லூர் நகரத்திற்கும் நரசிம்மகொண்டாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ஒரு பெரிய அரண்மனையை கல்லூரியாக மாற்றியிருந்தார்கள். சுற்றிலும் பெரிய மதில் சுவரும் அதன் பக்கத்தில் அகழியும் பார்ப்பதற்கு மிரட்டலாக இருக்கும். வெளியே எட்டி பார்த்தால் ஹைதராபாத்திற்கு செல்லும் நீண்ண்ண்ண்ட நெடுஞ்சாலையும் பஞ்சாப் லாரிகளும் மட்டுமே தெரியும். கார் பைத்தியமான எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

மாணவர்கள் முதல் கல்லூரி முதல்வர் வரை அனைவரும் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்ப மாட்டார்கள். நாம் ஆங்கிலத்தில் பேசினால் ஏதோ வேற்றுகிரக மனிதர்களை பார்ப்பது போல் பார்ப்பார்கள். என் அறையில் என்னை தவிர அனைவரும் தெலுங்கர்கள். மேற்குறிப்பிட்ட அனைத்து காரணங்கள் என்னை ஆறு மாதத்திலே தெலுங்கை சரளமாக பேசவைத்தது. எனக்கு ஏற்பட்ட அணைத்து கஷ்டங்களும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தது. 

எனவே மேற்படிப்பை வேறு மாநிலத்தில் (கண்டிப்பாக ஆந்திரா இல்லை!!!) படிக்கவேண்டும் என்றே முடிவு செய்திருந்தேன். முடிவில் பெங்களூரு எனக்கு சரியாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு வந்தேன். அதற்காக அந்த மாநில நுழைவு தேர்வு எழுதினேன். அந்த தேர்வில் வந்த மதிப்பெண் மூலம் பெங்களூரின் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் நான் இப்போது படித்துகொண்டிருப்பது வி.ஐ.டி பல்கலைகழகத்தில். இதையெல்லாம் பார்க்கும் போது, வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்று எனக்கு தோன்றியது. சிலர் இதனை விதி என்பார்கள். விதியை பற்றி எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் "மரணம் ஒன்றே மனிதத்தின் நிச்சயமான விஷயம். ஒரு மனிதனை சுற்றி அவன் சந்திக்கும் துர்மரணங்கள், ஏமாற்றங்கள், அசம்பாவிதங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் அவனுக்கு அவனது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் அவனுடைய மரணத்தின் நிச்சயத்துவத்தையும் சுட்டிக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து தனது வாழ்க்கைக்கு ஒரு பொருளை உருவாக்க நினைக்கும் மானுட மனத்தின் உருவாக்கமே விதி என்கிற கோட்பாடு" என்கிறார்.
Saturday, October 12
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

Get Notified !!! Give us your Email Address

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -