- Back to Home »
- சந்தோசங்கள் »
- குருவுமானவர்
Posted by : Sibhi Kumar SenthilKumar
Saturday, February 5
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவையும், பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையும் பிடிக்கும். அது போல நான் எங்கம்மா செல்லம். ஆனால் என் அப்பாதான் என்னுடைய குரு. மற்ற பிள்ளைகள் என்மீது பொறாமைப்படும் அளவிலே என் அப்பா என்னை வளர்க்கிறார். அவர்தான் என்னுடைய அறிவு பசியைத் தூண்டிக்கொண்டிருப்பவர்.
இப்போது கணினி இல்லாத இடமே இல்லை. ஆனால் என் அப்பா நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு கணினி வாங்கி கொடுத்தார். “உனக்கு என்ன பொம்மை வேண்டும்” என்று கேட்கவேண்டிய வயதில், என் அப்பா என்னிடம் “உனக்கு என்ன மென்பொருள் வேண்டும்” என்று கேட்டார்!!!
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது... நாங்கள் முதன் முறையாக கணினி வாங்கும்போது அதன் Hard Disk, 40GB திறன்கொண்டது. Ram, 216MB. அப்போது இருந்த கணினிகளில் நாங்கள் வாங்கியதுதான் அதிகபட்சமானது.
எங்கள் வீட்டில் கணினி வாங்கிய அடுத்த நான்கைந்து வருடங்களில் என் நண்பர்கள் வீட்டிலும் கணினி வாங்கத்தொடங்கினார்கள். ஆனால் அதில் முக்கால்வாசி பேருக்கு கணினி என்றால் என்னவென்று தெரியாது! பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காமலும், பந்தாவுக்காகவும் வாங்கினார்கள்!!!
ஆனால் எங்கள் அப்பா ஏற்கனவே கணினியில் நன்கு பழகியிருந்தார். ஏனென்றால் அப்போது அவர் ஒரு அச்சகத்தில் ஒரு பங்குதாரராக இருந்தார். அங்கு ஒரு கணினி இருக்கும். அதில் யாருடைய உதவியுமில்லாமல் அவரே கற்றுகொண்டார். அப்போதெல்லாம் பள்ளி விட்டு வரும்போது அப்பா எப்போதாவது அந்த அச்சகத்தில் நின்றால், நான் உள்ளே சென்று அங்கிருக்கிற கணினியில் ‘பாம்பர்’ (Bomber) என்கிற ஒரு சிறிய கேமை விளையாடுவேன். கணினி மேலிருந்த என்னுடைய பிரமிப்பு சிறிது சிறிதாக ஆர்வமாக மாறிற்று.
கணினி வாங்கித்தந்த எல்லா பெற்றோரும், அதில் கேம் விளையாட கூடாதென்று ஆரம்பத்தில் கண்டிப்பார்கள். பிறகு, விளையாடுவதை தவிர வேறு உபயோகமற்று கிடக்கும் அவை. ஆனால் என் அப்பா என்னை கண்டிக்கவில்லை. மாறாக கணினி மூலம் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்களைக் கற்று தந்தார். ‘கணினி ஒரு விளையாட்டு பொருளல்ல’ என்பது என் அப்பா அடிக்கடி கூறுவார்.
இன்றைய தினம், என் அப்பாவிற்கு ஒரு முக்கியமான நாள். இப்போது எனக்கு 14 வயது. இதுவரை என் அப்பா எனக்கு செய்த அளவுக்கு அவருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்பது என்னுடைய பெரும் வருத்தம். எனவே இனிவரும் காலங்களில் அவர் விருப்பபடி நான் சாதனைகள் பல செய்து அவரை மகிழ்விப்பதே என்னுடைய ஆசை.
இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/7102011.html